Sale!

மாற்றம் நம்மிடமிருந்து – சுற்றுச்சூழலை காப்போம்

Author: இரா. மகேந்திரன்

ISBN: 978-81-986720-3-2

DOI: https://doi.org/10.59646/t/343

Date of Publication: March 2025

About the Book:

உலக அளவில் இதுவரை 1.7 – 2.1  மில்லியன் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஹோமோ சேப்பியன்ஸ் எனும் மனித இனமும் ஒன்று. எனினும் நம்மை வாழ வைக்கும் பூமிக்கும், சுவாசிக்க ஆக்சிஜனையும், உயிர்வாழ உணவையும் அளிக்கும் தாவரங்களுக்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விலங்குகளுக்கும் நாம் தொடர்ந்து ‘இன்னல்களை’ செய்து வருகிறோம். இதில் பல செயல்களின் பின்விளைவுகளை தெரிந்தே செய்து வருகிறோம் என்பது தான் நிதர்சனம். உதாரணமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல். உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திருந்தாலும், நாம் அதனை பயன்படுத்தி வருகிறோம். ஏனெனில், இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மட்க  சுமார் 300 – 500 வருடங்கள் ஆகக்கூடும்.

பூமியின் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில், ஐந்தறிவு உள்ள விலங்கினங்களும், நுண்ணுயிரிகளும், தாவரங்களுமே பெரும்பங்கு வகிக்கின்றன. இதில்  மனிதர்களாகிய நம்முடைய பங்கு மிகக் குறைவே. ‘ஆந்த்ரோபோசீன் என்பது மனிதர்களால் இந்த பூமியில் ஏற்படும் மாற்றங்களை குறிப்பதாகும். பருவநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, மாசுபாடு போன்றவை ஆந்த்ரோபோசீனின் முக்கிய அம்சங்கள். உதாரணமாக, காடுகளை அழிப்பது, புதைப்படிவ எரிபொருட்களை பயன்படுத்துவது, தொழிற்சாலைகளிலிருந்து முறையாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றுவது போன்றவற்றால் இந்த பூமியில் ஏற்படும் தாக்கங்களை குறிப்பதாகும். பூமியின் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால், பேரழிவுகள் நிறைந்த வரலாறு நம் கண் முன்னே விரியும். ஆர்டோவிசியன்-சைலூரியன், லேட் டெவோனியன், பெர்மியன்-டிரையாசிக், டிரையாசிக்-ஜுராசிக், கிரேடேசியஸ்-பாலியோஜீன் என ஐந்து முறை, பூமி தன்னுடைய உயிரினச் செல்வத்தை பெருமளவு இழந்துள்ளது. இந்த அழிவுகள் அனைத்தும் இயற்கையின் சீற்றத்தால் நிகழ்ந்தவை.

கண்டங்கள் நகர்ந்ததால் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்கள், எரிமலை வெடிப்புகள், விண்கல் தாக்குதல்கள், வளிமண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்தது போன்ற காரணங்களால், எண்ணற்ற உயிரினங்கள் பூமியை விட்டு நிரந்தரமாக விடைபெற்றன. எந்த ஒரு உயிரினமும் இந்த அழிவுகளை நிகழ்த்தவில்லை!. மாறாக, இயற்கையின் ஆதிக்கத்திற்கு முன், அனைத்து உயிர்களும் தற்காலிகமானவை என்பதையும் அவை உணர்த்தின. ஆனால், இன்று நாம் இருப்பது முற்றிலும் மாறுபட்ட காலகட்டம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், இந்த பூமியின் உயிரினப் பன்மைத்துவத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. இது, மனித இனத்தின் வரலாற்றில் கரும்புள்ளியாக மாறிவிடாமல் இருக்க நாம் விழித்துக்கொள்ள வேண்டும். மிகச்சிறிய உயிரினமான பைட்டோ பிளாங்டன்கள் செய்து வரும் கார்பன், ஆக்சிஜன், ஊட்டச்சத்து சுழற்சியை கூட நம்மால்  செய்யமுடியாது  என்பதுதான் உண்மை.

சுற்றுச்சூழலில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் / அயனிகள் / வேதி மூலக்கூறுகளை வெளியிடுவதும், சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பண்புகளை மாற்றுவதும், ஆற்றல் சமமின்மையை உருவாக்குவதுமே மாசுபாடுஎன அழைக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, சுமார் 23,000 முறை சுவாசிக்க தேவையான ஆக்சிஜனும் (4-6 மி லி / நிமிடம்), 2,500 – 3000 கிலோ கலோரி உணவும், சுமார் 3-4 லிட்டர் நீரும், 5-7 மணி நேர தூக்கமும் தான் நமது அத்தியாவசிய தேவை. இவை அனைத்தும் நமக்கு எளிதாக கிடைத்துவிடுவதால், நமக்கு இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. ஆனால் இவை அனைத்தும், நமக்கு மாசுபாடு இல்லாமல் கிடைக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!.

உலகளவில், பத்தில் 9 பேருக்கு மாசுபாடு அடைந்த காற்றும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளால் பாதிக்கப்பட்ட உணவும், அசுத்தமான  நீருமே கிடைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் தான். தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் நாம் சுற்றுச்சூழலை தீவிரமாக மாசுபடுத்தி வருகிறோம். குறிப்பாக, புதை படிவ எரிபொருட்களை எரித்து, பசுங்குடில் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியேற்றி வருகிறோம்.  இது தற்போது உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணியாகும். பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வை பெருமளவு குறைத்தால் மட்டுமே வரவிருக்கும் மோசமான சூழ்நிலையை நம்மால் தவிர்க்க இயலும். இல்லையெனில் நம் செயல்களின் விளைவுகளை நாம் மட்டுமின்றி, எதிர்கால சந்ததியினரும் சந்திக்க கூடும். இது அரசாங்கத்தால் மட்டுமின்றி, உலக  மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

நம்முடைய ஆடம்பர தேவைகளுக்காக இயற்கை வளங்களை சுரண்டுவதால், வெப்பநிலை உயர்வது, பனிப்பாறைகள் உருகிவருவது, அதிதீவிர நிகழ்வுகள் நிகழ்வது, உயிர் பன்முகத்தன்மை அழிந்து வருவது என இதற்கு முன் உலகம் சந்திக்காத  பிரச்சனைகளை இப்போது நாம் சந்தித்து வருகிறோம். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. ஒரு உயிரினம் அழிந்தால், அது மற்ற உயிரினங்களையும் பாதிக்கும். பருவநிலை மாற்றத்தால், பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்த சுவடே தெரியாமல் அழிந்து வருகின்றன.  இது பூமியின் உயிர்  பன்முகத்தன்மையை பாதிக்கிறது. வடஅமெரிக்காவில் மட்டும், 2023 ஆம் ஆண்டில், 21 விலங்கினங்கள் அழிந்து விட்டன. எனவே, ‘உயிர்  பன்முகத்தன்மையை’ பாதுகாப்பது மிக அவசியமாகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், மாசுபாடு இல்லாத பழையபூமியை மீட்டெடுக்க வேண்டிய தருணமும் இதுவாகும். எனவே, இந்த அழகான பூமிக்கு நாம் என்னென்ன சிரமங்களைகொடுத்து வருகிறோம் என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது. இன்று நாம் அலட்சியமாக செய்யக்கூடிய செயல்கள் ஒவ்வொன்றும் எதிர்கால சந்ததியினரை பெரிதும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 456 கோடி ஆண்டுகளுக்கு முன், நமது சூரியனும், 8 கோள்களும், சிறு விண்கற்களும் ‘புரோட்டோ சோலார்’ எனும் நெபுலாவிலிருந்து உருவாகின.

2030 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில், நாம் கால் பதிக்க வேண்டும் என்பதை   லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். நமக்கு அருகில் இருக்கும் செவ்வாயில் நாம் குடியேற நினைத்தாலும், அது ஒரு வழி பயணமாகவே இருக்கும். ஏனென்றால், செவ்’வாயிலிருந்து’ பூமிக்கு திரும்ப வரும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. 20-03-2025  வரை உள்ள தரவின் படி, நமது அண்டத்தில் 5,856 புறக்கோள்கள் உள்ளன. ‘இந்த புறக் கோள்களில் உயிரினங்கள்  இருக்குமா? என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது, நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இந்த கோள்களுக்கு செல்ல முடியாது என்பதே உண்மை. எனவே, சூழ்நிலையின் யதார்த்தத்தை உணர்ந்து, நமது தாய் பூமியை பாதுகாக்க நடவடிக்கைகள்  எடுத்தாக வேண்டும்.

இந்நூல், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தாய் பூமியை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒன்றாகவே இருக்கும். நாம் சுற்றுசூழலில் ஏற்படுத்திய தாக்கம், அதனால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இதே நிலை தொடர்ந்தால் எதிர்கால சந்ததியருக்கு நாம் எந்த ‘மாதிரியான’ பூமியை கொடுக்கப்போகிறோம் என்பதை விளக்குகிறது. நம்முடைய நடவடிக்கைகள் மூலம் பூமியின் இயற்கை வளம் சுரண்டப்படாமலும், சுற்றுச்சூழல் மாசுபடாமலும்,  மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிரினங்களும் வாழத் தகுதியான பூமியை புதுப்பிக்க வேண்டும். இது சற்றே சவாலாக இருந்தாலும் சாத்தியமான ஒன்றே. ஏனென்றால், அதற்கான ‘நேரம்’ இன்னும் கடந்து விடவில்லை.

சர்வதேச அறிவியல் ஆய்விதழ்கள், ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு குழு (ஐ பி சி சி) அறிக்கைகள், ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் அறிக்கைகள், சர்வதேச ஒப்பந்தங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் முக்கிய நோக்கம், நாம் ஒவ்வொரு நாளும் செய்து வரும் ‘செயல்பாடுகளை’ மாற்றி, முக்கியமாக பெட்ரோலிய பொருட்கள் மூலம் இயங்கும் வாகனங்களை குறைப்பதும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை  தவிர்ப்பதும், உயிர் பன்முகத்தன்மை மாறாமலும், சுற்றுச்சூழலின் சமநிலை பாதிக்கப்படாமலும், 17ஆம் நூற்றாண்டில்  இருந்த மாசுபாடற்ற பூமியை பெற்றுத் தருவதாகும். உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே, மாற்றத்தை கொண்டுவர இயலும்.

நூல் ஆக்கத்தில் ஊக்கமளித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி. மாண்புமிகு. A. ராமமூர்த்தி, முனைவர். S. N. ராமசாமி, முனைவர். K. மோகன், முனைவர். I. கிறிஸ்டி ராஜ்  அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நூலில் பிழைகளைத் திருத்தி உதவி புரிந்த திருமதி. B. சுதா அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த நூல் சிறப்புற வர உதவி புரிந்த செல்வன். M. அனிஷ்,                  திரு. B. சத்திய நாராயணன், திரு. V. ஜெயராம், திரு. ராஜேஷ்அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த நூலில் பயன்படுத்தப்பட்ட படங்கள் எம் டி பி ஐ பதிப்பகத்திலிருந்தும், அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்தும், செயற்கை நுண்ணறிவு மூலமும் பெறப்பட்டவை.

Description