Sale!

Anthropocene – ஆந்த்ரோபோசின் (மானுட யுகம்)

Author: இரா. மகேந்திரன்

ISBN: 978-81-991955-2-3

DOI: https://doi.org/10.59646/ap/430

Date of Publication: August 22, 2025

About the Book:

பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின? இந்த பிரபஞ்சத்தில் நமது பங்கு என்ன? நிகழ்கால ‘தேவைகளுக்காக’ எதிர்கால சந்ததியினரை பணயம் வைப்பது எந்த வகையில் நியாயம்? பூமியில் உள்ள மற்ற உயிரினங்களின் ‘வாழ்வுரிமை’ நமது செயல்களால் பாதிக்கப்படலாமா ? தனிமனிதனாக, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?. இனிமேல், நம்மால் இயற்கையோடு ‘இயைந்த’ வாழ்க்கை முறை சாத்தியமா? நமது செயல்களால் பூமியில் நாம் உண்டாக்கிய தாக்கங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்களை தேடும் வண்ணம் இந்நூல்  தொகுக்கப்பட்டுள்ளது. சுமார் 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் உள்ள காலகட்டத்திலிருந்து நிகழ்ந்து வரும் மாற்றங்களை காட்சி படுத்துகிறது. நெருப்புக்  கோளமாக இருந்த பூமி, குளிர்ந்து நீலக்கோளாக உருவானதையும், பெருமோதலில் சந்திரன் பிறந்ததையும், உயிரின் முதல் மூச்சு கடலின் ஆழத்தில் தொடங்கியதையும் விரிவாக காண்போம். வளிமண்டலத்தில் ஆக்சிஜன் செறிவு எவ்வாறு  அதிகரித்தது என்பதையும், கடலிலிருந்து நிலத்தில் உயிர்கள் கால்பதித்தது முதல் 5 பேரழிவுகளைத் தாண்டி உயிரினங்கள் மீண்டெழுந்தது வரையிலான, பிரபஞ்சத்தின் மாபெரும் சரித்திர பக்கங்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. பூமியில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையும், ‘புதிய வாரிசாக’ மனிதனின் வருகையையும் காண்போம். ஆப்பிரிக்க புல்வெளிகளில் நாம் பதித்த முதல் காலடியில் தொடங்கி, ஹோமோ சேப்பியன்ஸ் எனும் ‘சிந்திக்கும் மனிதனாக’ உருமாறியதையும் இந்நூல்  கூறுகிறது. நம்முடைய அறிவும், உழைப்பும், தீராத தேடலும் நம்மை கற்காலத்திலிருந்து  கணினி காலம் வரை அழைத்து வந்தது என்றால் அது மிகையல்ல! மற்ற உயிரினங்களை விஞ்சி, பூமியின் ‘தலைவிதியை’ தீர்மானிக்கும் சக்தியாக இன்று நாம் வளர்ந்துள்ளோம்! கதை இத்துடன் முடிவடையவில்லை. அதன் இருண்ட பக்கங்கள் இனிதான் தொடங்குகின்றன.

நாம் வாழும் இந்த நீலக்கோள், தனது கோடிக்கணக்கான ஆண்டு கால வரலாற்றில் எண்ணற்ற ‘மாற்றங்களை’ கடந்து வந்துள்ளது. பனி யுகங்கள், எரிமலை சீற்றங்கள், கண்டங்களின் நகர்வுகள் என இயற்கையின் பிரம்மாண்டமான சக்தியால் வடிவமைக்கப்பட்ட பூமி, இன்று புதிய, முன்னெப்போதும் கண்டிராத புதிய புவியியல் சகாப்தத்தின் ‘வாசலில்’ நிற்கிறது. நாம் இப்போது வாழும் யுகத்தை விஞ்ஞானிகள் ‘ஆந்த்ரோபோசின்’ அதாவது ‘மானுடயுகம்’ என்று அழைக்கிறார்கள். இதன் பொருள் என்ன? வரலாற்றில் முதன்முறையாக, நாம்தான் இந்த பூமியின் மிகப்பெரிய மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறோம்! எரிமலைகள், பூகம்பங்கள், பனிப்பாறைகள் போல, மனித இனம்  ‘புவியியல் சக்தியாக’ உருவெடுத்துள்ளது. நமது செயல்களின் தடம், எவரெஸ்டில் இருந்து மரியானா அகழி வரை பதிந்துள்ளது. பூமியின் சூழலை வடிவமைக்கும் ‘சிற்பிகளாக’ நாம் மாறிவிட்டோம் என்பதே நிதர்சனம்.

கடந்த சில நூற்றாண்டுகளாக, குறிப்பாக தொழிற்புரட்சிக்கு பின்னர், நமது  செயல்கள் புவியின் மீது ஏற்படுத்திய ‘தாக்கங்கள்’  அளப்பரியது. தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், உலகமயமாக்கல், பருவநிலை மாற்றம்,  மக்கள்தொகை பெருக்கம், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயருதல், அதிதீவிர வானிலை நிகழ்வுகள், இயற்கை வளங்களின் அதீத சுரண்டல் என நாம் ‘இயற்கையின்  சமநிலையை’ குலைத்து வருகிறோம். இதனை கண்டும் காணாமல் செல்வது, புரையோடும் காயத்தை அலட்சியம் செய்வதற்கு ஒப்பாகும். இவை வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்ல, பூமியில் வாழும் உயிரினங்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் அச்சுறுத்தல்கள். இந்த மானுடயுகத்தின் சவால்களை புரிந்துகொள்வதும், அவற்றிற்கு தீர்வுகாண முயற்சிப்பதும் நம் அனைவரின்  கடமையாகும்.

‘ஆந்த்ரோபோசின்’ என்ற சொல், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் பால் குருட்சன் அவர்களால் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மெக்சிகோவில் நடந்த சர்வதேச அறிவியல் மாநாட்டின்போது, விஞ்ஞானி ஒருவர் தற்போதைய புவியியல் காலகட்டத்தை ‘ஹோலோசீன்’ என்று மீண்டும், மீண்டும் குறிப்பிட்டார். அப்போது பார்வையாளராக இருந்த விஞ்ஞானி குருட்சன் திடீரென குறுக்கிட்டு, ‘நாம் இனி ஹோலோசீனில் இல்லை, ஆந்த்ரோபோசீனில் நுழைந்து விட்டோம்’ என்று கூறினார். அந்த கணத்தில் பிறந்த இந்தச் சொல், அறிவியல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது!  மானுடயுகத்தின் தொடக்கத்தை எப்போது ‘குறிப்பது’ என்பதில் விவாதங்கள் இருப்பினும், விஞ்ஞானிகள் தொழிற்புரட்சியின் (1750-1800) தொடக்கத்தையோ / இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ‘பெரும் முடுக்கம்’ (கிரேட் ஆக்ஸலேரேஷன் – 1950 க்கு பிறகு) காலகட்டத்தையோ இதன் தொடக்கமாக கருதுகின்றனர். பெரும் முடுக்க காலக்கட்டத்தில், மக்கள்தொகை, ஆற்றல் பயன்பாடு, தொழிற்சாலைகள், செயற்கை உரங்களின் பயன்பாடு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்றவை அதிவேக வளர்ச்சி கண்டன. இதன் விளைவாக, பூமியில் நமது ‘தடம்’ ஆழமாக பதிய தொடங்கியது. உதாரணமாக தொழிற்புரட்சிக்கு முன்பு வரை, வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு சுமார் 280 பி பி எம் என்ற ‘சீரான’ செறிவில் இருந்தது. ஆனால், இன்று அதன் அளவு 425 பி பி எம்-ஐத் தாண்டிவிட்டது. இது சிறிய மாற்றம் போலத் தோன்றலாம். ஆனால், இந்த சிறிய மாற்றம் தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.  நமது உடலின் இயல்பான வெப்பநிலை 98.6 F. இது வெறும் 1  – 3 F வரை அதிகரித்தாலே, கடுமையான காய்ச்சல் வந்து நம்மை நிலைகுலையச் செய்கிறது. அது போலத்தான் பூமிக்கும்! வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு  அதிகரித்திருப்பது பூமிக்கு ‘காய்ச்சலை’ ஏற்படுத்தியுள்ளது. அதன் அறிகுறிகள்தான், நாம் இன்று சந்திக்கும் தீவிர வெப்ப அலைகள், கணிக்க முடியாத பெருமழை, அதிவேகமாக உருகும் பனிப்பாறைகள், கடல் மட்ட உயர்வு. மானுடயுகத்தின் மிக ஆபத்தான விளைவுகளில் ஒன்று நம்மால் தூண்டப்பட்ட ‘பருவநிலை மாற்றம்’. மானுடயுகம் என்பது வெறும் புவியியல் காலம் மட்டுமல்ல. அது நமது செயல்களால் உருவாக்கப்பட்ட ‘மாசுபட்ட’ யுகமாக மாறி வருகிறது என்பது தான் நிதர்சனம்1

உலக வானிலை ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், 2025 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில், புவியின் சராசரி வெப்பநிலை வரலாறு காணாத உயர்வைச் சந்திக்கும் என்ற எச்சரிக்கை விஞ்ஞானிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடல் நீர் மட்டம், 1901 – 2018 வரை சுமார் 20 செ.மீ. உயர்ந்துள்ளதுடன், வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ போன்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையும், தீவிரமும் உலகெங்கும் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.  உலக வனவிலங்கு நிதியம் – 2022 அறிக்கையின் படி, 1970 – 2018 வரை, வனவிலங்குகளின்  எண்ணிக்கையில் சுமார்  69 % சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், மில்லியன் கணக்கான டன் நெகிழிக் கழிவுகள் கடலில் கலந்து வருவது கடல்வாழ் உயிரினங்களுக்கும்,  உணவு சங்கிலிக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும். கடலின்  அழுகுரல், நஞ்சாகும் நிலம், கான்கிரீட் கட்டிடங்களின் பெருக்கம், பல்லுயிர்களின் கதறல் என இந்நூல் நம் காலத்தின் நெருக்கடியை அதன் ‘தீவிரத்துடன்’ பதிவு செய்கிறது.

பூமியின் 9 முக்கிய ‘எல்லைகளை’ நாம் கடந்துவிட்டோமா?  தொழில்நுட்ப புதைபடிவங்கள் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கும்  இந்நூல் விடையளிக்கிறது. உலகளாவிய சுற்றுச்சூழல் மாசுபாட்டை  எதிர்கொள்வது நமது பொறுப்பாகும். ஏனென்றால் இந்த மாசுபாட்டை உருவாக்கியதே நாம் தான்! இதற்கு மாற்றாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும், கழிவுகளை குறைப்பதும், பல்லுயிரை பாதுகாப்பதும், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் உடனடித் தேவையாகும். 2023 ஆம் ஆண்டில், உலகளாவிய மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு 30 % ஐ எட்டியது போன்ற நம்பிக்கையூட்டும் அறிகுறிகள் தென்பட்டாலும், பாதுகாக்காப்பான எதிர்காலத்தை உருவாக்க நமது வாழ்க்கை முறையில் பெரும் ‘மாற்றங்கள்’ தேவை. இந்த சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு யார் காரணம்? எது சூழலியல் நீதி? என வெறும் குற்றச்சாட்டுகளுடன் நிற்காமல் நிலையான தீர்வுகளையும் எடுத்துரைக்கிறது. வளர்ச்சியா? புரட்சியா? என்ற விவாதத்தை தாண்டி, பூமித்தாய்க்கு புத்துயிர் அளிப்பதற்கான வழிகளையும் ஆராய்கிறது. 2100-க்குள் ‘மாற்றத்திற்கான’ வாய்ப்புகள் இன்னும் நம் கையில் இருப்பதையும், புவி அறநெறியின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

அடுத்து வரும் 50 ஆண்டுகள் சற்று கடினமான ‘சோதனை காலமாக’ இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஏனென்றால், நாம் கடந்த நூற்றாண்டுகளில் விதைத்த பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளின் ‘விளைவுகளை’ அறுவடை செய்யப்போகும் காலகட்டம் இது. நாம்  குறுகிய, ஆபத்தான பாலத்தின் மீது நிற்கிறோம். இதுதான் அடுத்த 50 ஆண்டுகள். நாம் ஒற்றுமையாக ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு இந்த பாலத்தைக் கடந்துவிட்டால், மறுமுனையில் செழிப்பும், அமைதியும் நிறைந்த மாசுபாடற்ற ‘புதிய உலகம்’ காத்திருக்கிறது. இன்றைய தலைமுறையினரின் கடமை, வருங்காலத் தலைமுறையினருக்கு  மாசுபாடற்ற, பசுமையான பூமியை கொடுப்பதுதான். நாம் எதிர்கொள்வது சோதனைக் காலத்தை மட்டுமல்ல, வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பையும் கூட! இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள படங்கள் எம் டி பி ஐ பதிப்பகத்திலிருந்தும், அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்தும், செயற்கை நுண்ணறிவு மூலமும் பெறப்பட்டவை.

நூல் ஆக்கத்தில் ஊக்கமளித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி. மாண்புமிகு. A. ராமமூர்த்தி, முனைவர். S. N. ராமசாமி, முனைவர். K. மோகன், முனைவர். I. கிறிஸ்டி ராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நூலில் பிழைகளைத் திருத்தி உதவி புரிந்த திருமதி. B. சுதா அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த நூல் சிறப்புற வர உதவி புரிந்த செல்வன். M. அனிஷ், திரு. B. சத்திய நாராயணன், திரு. V. ஜெயராம்,  திரு. S. ராஜேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

Description